Saturday, October 22, 2016

தாய் மொழி!
உலகளாவிய ஆய்வு நிறுவனத்தின் முடிவுகளின்படி, குழந்தைகள், வாசிக்கவும், எழுதவும் கற்கவேண்டிய முதல் மொழி தங்கள் தாய்மொழி மட்டுமேதான்! குறைந்தபட்சம், ஒரு நிமிடத்திற்கு  45 முதல் 60 வார்த்தைகள் வரை சரளமாக வாசிக்க முடிந்தால் மட்டுமே அவர்களால் வாசித்த அந்த விசயத்தை முழுமையாக உள்வாங்க முடியுமாம். இத்தன்மை அவரவர்கள் தாய்மொழியால் மட்டுமே சாத்தியமாகுமாம். இந்த அடிப்படை ஞானம் வாய்க்கப்பெற்ற குழந்தைகள் மிக எளிதாக இரண்டாம் மொழியில் வல்லமை பெற்று சாதனையும் படைத்துவிடுகிறார்களாம்... பெற்றோர்கள் அவசியம் சிந்தித்துணரவேண்டிய விசயம்!

Wednesday, October 19, 2016

தேசிய தமிழ் காவலர்!


பவள சங்கரி
சமீபத்தில் மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர் தேசிய தமிழ் காவலர், தமிழ்வேள் – இல.கணேசன் அவர்களை வல்லமை வாழ்த்துகிறது.
நேற்று பொற்றாமரை கலை இலக்கிய மன்றத்தின் மாதாந்திர இலக்கியக் கூட்டமும், மத்திய பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு பொற்றாமரை குழுவினர் மற்றும் நண்பர்களின் பாராட்டு விழாவும் ஒரு குடும்ப விழா போன்று மிக எளிய முறையில் நடைபெற்றது. இலக்கிய உலகின் ஆகச்சிறந்த ஆளுமைகள் ‘எழுத்துச் சித்தர்’ திருமிகு. பாலகுமாரன், திருமிகு.சிவசங்கரி, திருமிகு. திருப்பூர் கிருஷ்ணன், திருமிகு.கவிக்கோ ஞானச்செல்வன், திருமிகு ஹெச்.ராமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சகோதரிகள் குமாரி அஞ்சனி – அஸ்வினி ஆகியோரின் இனிமையான வீணை இசையுடன் இனிதே ஆரம்பித்தது இந்த விழா. ‘வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்’ என்று கலைவாணியை காட்சியில் நிறுத்தி, ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எனத் தொடர்ந்து வாழ்த்தி, ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என மிக அழகானதொரு இசை வேள்வியை நிகழ்த்தி அனைவரையும் இசையில் மெய்யுருகச் செய்தனர். வளர்ந்துவரும் இசைக் கலைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் பொற்றாமரை அமைப்பு இம்முறை இக்கலைஞர்களை அறிமுகப்படுத்தி கௌரவித்துள்ளார்கள்.


மாதமொரு இலக்கிய அறிமுகம் என்ற வரிசையில், திரு ம.வெ. பசுபதி அவர்கள் அருமையாக ஆசாரக்கோவை பற்றியும், கவிதை உறவு ஆசிரியர் திரு ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்கள் ‘சொந்தமாய் ஒரு சொர்க்கம்’ என்ற தலைப்பில் உறையாடியதைத் தொடர்ந்து தலைவர் தலைமையுரையுடன் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

Thursday, October 13, 2016

சுட்டும் விழிச்சுடர்! – மூட நம்பிக்கை


சமீபத்தில் ஆன்மீகம் – தெய்வ நம்பிக்கை என்ற பெயரில் ஒரு இளம் பெண்ணை மூளைச்சலவை செய்து பட்டினி போட்டு கொன்ற சம்பவம் சமூகவியலாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் உயிர் நீத்துள்ளார். சமண சமயத்தைச் சேர்ந்த சிறுமி ஆராதனா சம்தரியா. சமயக் கடமை என்ற பெயரில் தண்ணீர் மட்டுமே குடித்து 68 நாட்கள் தொடர் விரதம் இருந்து வந்துள்ளார். விரதம் முடிந்ததைக் குறிக்கும் வகையில் ஆராதனாவின் பெற்றோர் அவரைத் தேரில் ஊர்வலமாக அழைத்துச்சென்று ‘பாரானா’ என்ற பெயரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அதில், தெலுங்கானா மாநில அமைச்சர் பத்மராவ் கவுட், தலைமை விருந்தினராக பங்கேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆராதனா, சென்ற ஆண்டிலும் இதேபோன்று 68 நாள் விரதம் மேற்கொண்டதை சிறார் உரிமை அமைப்பு மூலம் அறியமுடிகிறது. செகந்திராபாத்தில் நகைக்கடை உரிமையாளரின் மகளான, எட்டாம் வகுப்பு பயிலும் ஆராதனா என்ற சிறுமி பெற்றோரின் கட்டாயத்தின்பேரில் இப்படிப்பட்ட ஒரு விரதத்தை மேற்கொண்டதாகவும் அந்த அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. விரதம் முடிந்து உடல் பலகீனமாக இருந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் அக்டோபர் 3ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.

Saturday, October 8, 2016

சோதிவடிவே! சுடரொளியே!

ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின்  சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்

Friday, October 7, 2016

வெந்தயக்கீரை பலதானிய ரொட்டி

தேவையான பொருட்கள் :


வெந்தயக்கீரை - 1 கப்
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு  - 1/4 கப்
குதிரைவாலி மாவு - 1/4 கப்
கம்பு, சோளம் மாவு - 1/4 கப்
திணை அரிசிமாவு  - 1/4 கப்
பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 1/2 தே.க
மிளகாய் தூள் - 1/2 தே.க
சீரகத்தூள்  - 1/2 தே.க
கொத்தமல்லி தூள் - 1/2 தே.க
தூள் உப்பு   - 3/4 தே.க
மஞ்சள் தூள்  - 1/2 தே.க
தயிர்    - 5 தே.க
தேவையான அளவு எண்ணெய்

மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரையுடன் கலந்து, தேவையான அளவு தண்ணீருடன் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துக்கொள்ளவும். வட்ட வடிவில் சப்பாத்தியாக இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்து, சுருட்டி அடுக்கவும். சுவையான, ஆரோக்கியமான வெந்தயக்கீரை  பலதானிய ரொட்டி தயார். பன்னீர் பட்டர் மசாலா அல்லது காய்கறி குருமாவுடன் சூடாகப் பரிமாறவும்.