Tuesday, February 7, 2017

ஓவியக்கவி கலீல் கிப்ரானின் ஞானமொழிகள்



பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை முதன் முதலில் கையில் எடுக்கும்போது ஏற்படும் அந்த பரவச நிலையே நம் நூலை தீண்டும் இன்பம் அளிக்குமென்பது எல்லோருக்கும் இயல்பு. அந்த வகையில் என் உணர்வோடு பின்னிப்பிணைந்த கலீல் கிப்ரான் எனும் மாகவிஞனின் கவிதைகளில் ஒரு துளியை சுவைத்ததின் பலனாக இந்நூல் வெளி வந்துள்ளதில் பேரானந்தம். அதனை அன்பு நண்பர்களுடன் பகிர்வதில் மன நிறைவு! இதோ நூலின் முன்னுரை...



என்னுரை


ஆன்மாவின் கருவிலிருந்து அழகு மிளிர உருவாகும் அற்புத படைப்புகளே கவிதைகள் என்பது! உள்ளமெனும் ஆழ்கடலின் ஊற்றாய் தங்கு தடையின்றி பெருக்கெடுப்பது. ஆம் உள்ளத்து உன்னத உணர்வுகளின் வெளிப்பாடு அது. ஒரு கவிஞரின் முகமூடியற்ற எண்ணவோட்டங்களின் நிறைவடிவம் அவை. நல்லதொரு கவிதை என்பது கால எல்லைகளைக் கடந்தும் ஒளிர்பவை. உயிர்களின் வாழ்வியல் இன்ப துன்பங்கள், சிக்கல்கள்,தீர்வுகள், புத்தெழுச்சிகள், பரிதவிப்புகள், பிரச்சனைகள், நன்னெறிகள், நயமிகு சிந்தைகள், அழகியல் வண்ணங்கள், காதல் சின்னங்கள் போன்ற மானுடச் சமுதாய நலம் பாடும் உணர்வுகளை முன் நிறுத்துபவை. அதாவது கவிதைகள் என்பது கவிஞனுடைய ஆன்மாவின் உயிர்ப்பாக மிளிரக்கூடியவை. தேசம், இனம், மொழி போன்ற எதையும் கடக்கும் வல்லமை கொண்டவை. சமுதாய நலனில் அக்கறை கொண்டு, ஏமாற்றுகள், பொய் புரட்டுகள் என அனைத்தையும் வெளிச்சமிட்டுக்காட்டி விழிப்புறச் செய்பவை. கவிதைகள் மானிட மேம்பாடு என்பதை குறிக்கோளாகக் கொள்வதையே தலையாய பணியாய் கருதியிருத்தல் அவசியம். ஒரு கவிஞன் அவலம் நிறைந்த மனித வாழ்வினை முற்றும் உணர்ந்தவனாகவே இருக்கிறான்.

1883 ஆம் ஆண்டில் பிறந்த கலீல் கிப்ரான் ஒரு கவிஞன் மட்டுமல்ல, தத்துவ ஞானி மற்றும் நல்ல ஓவியனும்கூட. தன் கவிதைகளுக்குத் தானே ஓவியமும் தீட்டிவிடுவான் இக்கவி. இக்கவிஞனின் படைப்புக்கள் 20 க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் தலைசிறந்த நகரங்கள் அனைத்திலும் இவன் படைப்புகள் காட்சியாக்கப்பட்டுள்ளன. கலீல் கிப்ரானின் கவிதைகள் கால மாற்றம் எனும் சிறைக்குள் அகப்படாத கருத்துக் களஞ்சியம் என்றால் அது மிகையில்லை. எளிமையான மனித வாழ்க்கையின் வலிகளையும், இன்ப வேதனைகளையும், தம் உணர்வூறிய வார்த்தைகளின் மூலமாக கவிதைகளாக பரிணாமம் பெறச்செய்துள்ளார். மெய்ஞ்ஞான விஞ்ஞானங்களின் கூட்டுச் சேர்க்கை இவர்தம் உன்னதப் படைப்புகளான கவிதைகளும், ஓவியங்களும். கிப்ரானின் திறமை மிக்கப் புலமைக்கு அகில உலகத்தினரும் ஓர் முக்கியமான இடத்தை அளித்திருப்பதே இதற்கு சான்றாகும். மகாகவிக்குரிய தீர்க்க உள்ஞானம் வாய்க்கப்பெற்றவர் கலீல் கிப்ரான். வள்ளுவர், ஒளவையாரைப் போன்று அறவழி காட்டும் படைப்புகளை ஆக்கியதால், அவரை ஓர் ‘அறக்கவி’ என்றும் பைரன், ஷெல்லி போன்று காதல், காமம் என எழுதியதால் ‘இன்பக்கவி’ என்றும், தெய்வச் சிந்தைகளை சிறப்பாக ஊக்குவித்திருப்பதால், ‘பக்திக்கவி’ என்றும், வறுமை, தாழ்மை, கீழ்மை, பழமை, மடமை, ஏழ்மை, பெண்மை, தாய்மை என அனைத்தையும் அலசி ஆய்ந்து அறிவு புகட்டியுள்ளமையால், ‘மானுடக்கவி’ என்றே மொத்தமாக வரைவிலக்கணம் வடிக்க முடிகிறது. வாழ்தலே கவிதையாகியும், கவிதையே வாழ்வாகியும் ஓர் ‘அனுபூதிநிலை’ யை (அனுபவ ஞானம்)  எட்டிய கவிஞன் இவன்.

‘நமக்குத் தொழில் கவிதை
நாட்டிற்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல் …….’ 

என்ற நம் மாகவி பாரதியின் சொல்லோவியத்திற்கேற்ப கிப்ரானும் தம் மொத்த வாழ்க்கையையும் கவிதை, ஓவியம் என அர்ப்பணித்த மாபெரும் கலைஞன். 


எழுத்து
ஆன்மாவின் ரத்தம்

கவிதைகள்
காலத்தின் உதடுகள்

தகிடுதத்தங்களுக்கு
நகக்கண் ஊசி

வடக்கும் தெற்கும்
மேற்கும் கிழக்கும்
பேதமாய்ப் பாரோம் ! 

யாம் திசைகளை விழுங்கும்
திகம்பர கவிகள்

என்ற சிற்பியின் கவியுரைக்கு உதாரணமாகவே திகழ்பவன் கிப்ரான்.மறை பொருள், குறியீடு, இரட்டை அர்த்தம் என எந்த பிசிறுகளுமற்ற, ஆழ்ந்த பொருளுடைய எளிமையான கவிதைகள் இவனுடையது.

 மனிதனின் புறப்போராட்டங்கள், சோகங்கள் என அனைத்தையும் பாரபட்சமின்றி  பாடுகின்றார் இவர். இயற்கையின் கவின்மிகு கலைகளில் இலயித்து தோய்ந்து அனுபவித்து ஆழ்ந்து பாடுவது மட்டுமன்றி அவைகளை அழகு ஓவியங்களாகவும் தீட்டி மகிழ்ந்துள்ளார். இவரது கவிதைகளை வாசிப்போருக்கு ‘கவிஞனே’ மையமாக நின்று வாழ்க்கையின் பல்வேறு சூழல்களையும் அனுபவித்தது போன்றதொரு உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்கவியலாது.இயற்கைக் காட்சிகள், சோகங்கள்,காதல், காமம் என அனைத்தையும் ஓவியங்களாகவும் பதிவுசெய்து மலைக்கச்செய்கிறான். மனித வாழ்க்கையை உள்ளது உள்ளவாறே படமெடுத்து, உலகப்பொது மரபுகளையும், மனித மனங்களையும், மெய்ப்பாடுகளையும், ஆத்ம உணர்ச்சியும்,ஞான உணர்ச்சியும் கொண்டு அழகிய வண்ண மாலையாகக் கோர்த்து அளித்துள்ளான்.தமது ஞானக்கண்ணால் பெற்ற தீர்க்க தரிசனத்தை மானுடத்திற்கு தம் கவி மூலம் அள்ளி வழங்கியுள்ளான் இம்மாகவி என்றாலும் அது மிகையில்லை.

கவிதை மொழிபெயர்க்க இயலாதது என்றும் மொழி பெயர்ப்பில் காணாமல் போவது கவிதையின் உயிர்த்துடிப்பு என்றும் சொல்கிறார்கள். அனைத்துமே உண்மைதான் என்றாலும் வேறு வழி இல்லை. கவிஞனின் அதே மனநிலையில் உறைந்தவாறு எழுதுவது என்பது சாத்தியமில்லை. இயன்றவரை  முயன்றாலும், மூலத்தில் இருக்கும் கவிதையின் ஒரு சில அம்சங்களாவது மொழிபெயர்ப்பில் சேதமின்றி தரக்கூடுமானால் அதுவே நிறைவளிக்கக்கூடியது. அந்த வகையில் கலீல் கிப்ரானின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கவிதைகளை மூலத்தின் எந்த மாற்றமும் செய்யாமல், கருத்துகளில் எந்த சமரசமும் கொள்ளாமல், உள்ளதை உள்ளவாறு அப்படியே தமிழில் அளிக்க முயன்றிருக்கிறேன். ‘கெய்ஷா’ என்ற ஆங்கில வழி சப்பானிய மொழி 420 பக்க புதினம் மொழி பெயர்ப்பு செய்ததைக்காட்டிலும் சவாலான முயற்சி இது என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டியுள்ளது. 

வழமையாக, என்னுடைய இந்த நூலிற்கும் ஆதரவளித்துள்ள பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்கும், எமக்கு நல்லாதரவும், உற்சாகமும், ஊக்குவிப்பும் அளித்துவரும் ஐயா, திருமிகு முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.தங்கள் கருத்துரையும், ஊக்கமும், பாராட்டுதல்களும் அளித்து, இந்நூல் மிகச்சிறந்த முறையில் வெளிவர உதவிய அனைத்து இணையக்குழும, முகநூல் நண்பர்களுக்கும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

அன்புடன்
பவள சங்கரி
Mail id : coraled@gmail.com



No comments:

Post a Comment